×

இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் ஒரு நெல் மணியை கூட வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை

புதுக்கோட்டை,ஜன.12: தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, கதிர் முற்றி அறுவடை செய்வதற்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியதால் ஒரு நெல்மணியை கூட வீட்டிற்கு கொண்டு வர முடியாத நிலையில் உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி மட்டுமே இருந்து வந்தது. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டுபோய் இருந்தது. இதானல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி நகர் பகுதிகளுக்கு கூலி தொழில் செய்ய சென்றனர். இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு பிற்பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்யத்தொடங்கியது. இதனால் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்ப தொடங்கியது. இதனை கொண்டு விவசாயிகள் அனைத்து வயல்களையும் நடவுசெய்தனர். இதனால் பார்க்கும் வயல்வெளிகள் அனைத்தும் பசுமையாக காணப்பப்ட்டது. தற்போது சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதால், நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த மழையின் காரணமாக, மானாவாரி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் பயிர் செய்த பயறு வகைகள், நிலக்கடலை, கிழங்கு வகைகள், மிளகாய், வாழை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை உபயோகமாக இருக்கிறது. அதேசமயம், நெல் பயிரிட்ட விவசாயிகள் இந்த மழையின் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். பயிரிடப்பட்ட நெல், தற்போது கதிர் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்தச் சூழலில், மழை பெய்ததால் கதிர்கள் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன. இது, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெருவாரியான இடங்களில் நெல் சாய்ந்து வயல்வெளிகளில் பாய்போல் காட்சியளிக்கிறது. இதனால் கீழ் பகுதியில் அழுகி வருகிறது. நெல்கள் அனைத்தும் தரையில் விழுந்து முளைக்க தொடங்கியது. இதனால் பெருத்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மழை பெய்வது எப்போதுமே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால், தற்போது நெல் பயிர்கள் கதிர் முற்றிலும் அறுவடைக்குத் தயாரான நிலையில், மழை பெய்ததால் தண்ணீரில் கதிர்கள் மூழ்கிவிட்டன. தண்ணீரை வடிக்க முடியாதபடி வாய்க்கால்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. அதனால் முற்றிய பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடைசெய்ய முடியாத நிலைமை உள்ளது. தண்ணீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் மிகுந்த சிரமத்துடன் கையால் அறுவடை செய்யும் நிலைமை உள்ளது. வயிலில் தண்ணீர் தேங்கி நிற்பதால், முழுமையாக அறுவடை செய்ய முடியவில்லை. இன்னும் மழை தொடர்ந்தால் ஒரு நெல் மணியை கூட எங்களால் வீட்டிற்கு கொண்டு வரமுடியாது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : Students Union ,Indian ,
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு