வயது வந்தோர் கல்வி திட்டம் மூலம் கல்வி பயில வரும் மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

நாகை, ஜன.12: தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை வட்டார செயவாளர் பால சண்முகம் அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது; மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு தமிழகத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தை தொட ங்கி கடந்த நவம்பர் 2020 முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 முதல் 20 வரை பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளில் வயது வந்தோர் கல்வி திட்டத்தை முதற்கட்ட மாக கல்வித்துறை துவங்கியுள்ளது. 20 பேர் வரை இந்த மையங்களில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ஊதியம் எதுவும் வழங்க அரசாணையில் குறிப்பிடவில்லை. தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மட்டும் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் உள்ள இடர்பாடுகளாக தலைமை ஆசிரியர்கள் கருதுவது தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களை குறித்த நேரத்துக்கு வர சொல்வது போன்ற விஷயங்களில் நிர்வாக சிரமங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் உத்தரவாதமும் இல்லை. கல்வி கற்க வரும் வயது வந்தோருக்கு எவ்வித பணமும் தருவதில்லை. கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்போது மையத்தில் கற்போர் குறைந்தபட்சம் 10 பேராவது இருக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த பணத்தில் ரூ.50 அல்லது ரூ.100 கொடுத்து பயனாளிகளை கொஞ்ச நேரமாவது வந்து அமருங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர். இந்த திட்டத்தை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டுமெனில் பொதுமுடக்கம் முடிந்து பள்ளிகள் துவங்கும் வரை பள்ளிகளில் உள்ள ஆசிரியரே இந்த வகுப்புகளை நடத்தலாம். பள்ளிகள் திறப்பிற்கு பின் தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கலாம். வகுப்பில் பங்கேற்க வயது வந்தோருக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். எனவே வயது வந்தோர் கல்வி திட்டத்தில் பங்கேற்க வரும் வயது வந்தோருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: