கலெக்டர் அலுவலகத்தில் 19 மீனவ கிராமமக்கள் மனு காரைக்காலில் மாணவர்கள் தங்கும் விடுதியை சிறைச்சாலையாக மாற்றமா?

காரைக்கால், ஜன.12: காரைக்காலில் மாணவர்கள் தங்கும் விடுதியை சிறைச்சாலையாக மாற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரைக்காலில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கிளை சிறைச்சாலை இயங்கி வந்தது. விசாரணைக் கைதிகளும், தண்டனை கைதிகளும் காரைக்காலில் உள்ள கிளை சிறையிலேயே தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் மகளிர் சிறை மட்டும் இங்கு இல்லை. இதனிடையே கிளை சிறைச்சாலை பழுதடைந்து இருப்பதாகவும் கட்டிடத்தை பழுது பார்க்க வேண்டும் என்றும் கூறி காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கிளைசிறை மாற்றப்பட்டது.

இதன் காரணமாக குற்றவாளிகளாக கருதப்படுவோரை காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து அழைத்து வருவதற்கும், கால விரயமும், செலவும் ஏற்பட்டு வந்ததோடு பாதுகாப்பு குறித்த பிரச்னையும் இருந்து வந்தது. புதுச்சேரி சிறையில் இருப்பவர்களை பார்க்க வேண்டுமென்றால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் புதுச்சேரிக்கு செல்ல வேண்டிய நிலையும் உருவானது. இதனால் காரைக்காலிலேயே சிறையை செயல்படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால் காரைக்காலில் சிறை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதியை சிறைச்சாலையாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. மாணவர் தங்கும் விடுதியை சிறைச்சாலை ஆக்குவதா? என சமூக ஆர்வலர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், ஆதி திராவிட இயக்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தங்கிப் படிக்க இடமின்றி தவித்த எத்தனையோ ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிய இந்த தங்கும் விடுதியில் சிறைச்சாலை அமைக்கக்கூடாது என்று கூறி ஆதிதிராவிட அரசினர் விடுதி மீட்புக் குழுவினர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் பிரிவின் அதிகாரி துணை வட்டாட்சியர் மதன்குமாரிடம் மனு அளித்துள்ளனர். தாங்கள் தங்கிப் படித்த மாணவர் விடுதி சிறையாகிவிடுமா? என்று,அதில் தங்கி படித்து இன்று பல்வேறு அரசுப் பணிகளில் இருப்போரும் மன வேதனை அடைந்துள்ளனர். அரசின் முடிவு சரியாகுமா? அரசினர் விடுதி சிறையாகுமா? என எதிர்ப்புக் குரலோடு போராட்டத்தில் குதிக்க ஆதி திராவிட அரசினர் விடுதி மீட்புக் குழு தயாராகி வருகிறது.

Related Stories: