பொங்கலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாகைக்கு வந்திறங்கிய கரும்புகள் ஒரு கரும்பு ரூ.25க்கு விற்பனை

நாகை, ஜன.12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாகைக்கு கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழர்களின் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை முக்கியமானது ஆகும். உழவுக்கு வித்திட்ட சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை முதல்நாளில் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையில் புத்தாடை அணிந்து புது அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவார்கள். இதில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்டவைகளும் இடம்பெறும். அதேபோன்று புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு, பெண் வீட்டு சார்பில் பொங்கல் வரிசை கொடுப்பதும் மரபாக உள்ளது.

பொங்கல் வைப்பதற்காக மண்பானை, அடுப்புகள், மண்ணாலான மூடிகள் மற்றும் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை நாகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், நாகை கடைத்தெரு, நீலா தெற்கு வீதி, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இதனால் நாகை கடைத் தெருவில் பொங்கல் பொருள்களின் விற்பனை களைகட்டியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், மயிலாடுதுறை, கருவி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் கரும்புகள் நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளது. ஒரு கரும்பு ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.13க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளை ரூ.15க்கு மொத்தமாக கொள்முதல் செய்தது. இதனால் சிறு வியாபாரிகளான நாங்கள் கரும்பு கொள்முதல் செய்யும்போது விலை உயர்ந்துள்ளது. இதன்படி ரூ.15 லிருந்து ரூ.20 வரை கொள்முதல் செய்கிறோம். இதுபோக ஆட்கள் கூலி, போக்குவரத்து செலவும் இருக்கிறது. எனவே ஒரு கரும்பு ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. எனவே கட்டு கரும்புகள் வாங்க பொதுமக்களிடம் விருப்பம் இல்லை. மேலும் தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ததால், சிறு வியாபாரிகளாகிய நாங்கள் அதிக விலை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையும் நடக்கவில்லை. எனவே கரும்பு வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க உள்ளதாக வருத்தத்துடன் கூறினர்.

Related Stories: