மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள கஞ்சா கடைத்தெரு பெயரை மாற்ற வேண்டும்

காரைக்கால், ஜன.12: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கஞ்சாகடைத்தெருவின் பெயரை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு தெருவின் பெயர் கஞ்சா கடைத் தெரு. இந்த தெருவின் பெயரை வெளியில் கூட சொல்ல முடியாமல் அங்கு வசித்து வரும் மக்கள் அவமானத்திற்குள்ளாகி வருகின்றனர். அந்த பெயரை மாற்ற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலவாஞ்சூர் கிளைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலவாஞ்சூர் கிளைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிளை செயலாளர் தர், கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், அப்துல்லா, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மேலவாஞ்சூர் பகுதியில் சுமார் 850க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் அங்கு மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டும். அலிஷா மரைக்காயர் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும். இப்பகுதியில் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிவப்பு அட்டை வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மேலவாஞ்சூரில் உள்ள கஞ்சா கடைத்தெரு என்ற தெருவின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: