கொள்ளிடம் அருகே மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நெட்டிதக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கிராமமக்கள்

கொள்ளிடம், ஜன.12: கொள்ளிடம் அருகே வருடத்தில் மூன்று மாதங்களுக்கு நெட்டி தக்கை தயாரிக்கும் பணியில் ஒரு கிராம மக்களே ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த மேல வல்லம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 80 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அத்தனை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை மற்றும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் நெட்டி தக்கை தயாரிக்கும் தொழிலில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை முடிந்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் இங்குள்ள ஆண்கள் சுமார் பதினைந்து அல்லது இருபது பேர் நெட்டிதக்கை செடிகளை சேகரித்து எடுத்து வருவதற்கு கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரி மற்றும் புதுச்சேரி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளுக்கு சென்று சேகரித்து வருகின்றனர். இந்த நெட்டி செடிகளின் தண்டின் பகுதியில் வடிவத்துக்கு தக்கவாறு வெட்டி காயவைத்து பின்பு உடனடியாக மஞ்சள், நீலம், சிவப்பு உள்ளிட்ட தேவையான நிறங்களில் சாயம் கொடுக்கப்பட்டு மீண்டும் காய வைக்கப்படுகிறது.

இந்த தக்கைகளை மாலையாக கோர்க்கும் வகையில் கடலோர கிராமங்களுக்கு சென்று கத்தாழை செடி எடுத்துவந்து அதிலிருந்து நாரெடத்து அந்த நாரில் நெட்டி தக்கைகளை கோர்த்து, ஒவ்வொரு மாலையிலும் பூ போன்ற குஞ்சம் செய்து அதனுடன் சேர்த்துகட்டி மாலையாக்கி தயார் செய்கின்றனர். இந்த நெட்டிதக்கை மாலைகள் செய்து முடிப்பதற்கு ஐப்பசி, கார்த்திகை மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் சுமார் நான்காயிரம் முதல் 5000 மாலைகள் தயார் செய்யப்படுகின்றன. அனைத்து மாலைகளையும் இங்குள்ள இளைஞர்களும், ஆண்களும் சிதம்பரம், கடலூர், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சைக்கிள்கள் மூலமாக எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.

ஒரு நெட்டி தக்கை மாலையின் விலை ரூ.10 வீதம் விற்பனை செய்கின்றனர். மாட்டுப்பொங்கலன்று ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு இந்த இயற்கை முறையிலான நெட்டித் கைகளை இயற்கை விரும்பிகள் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலங்களில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மாலைகள் பயன்படுத்தி வந்தாலும் சிலர் இந்த வகையான நெட்டிதக்கை மாலைகளை பெரிதும் வாங்கி கால்நடைகளுக்கு அணிவித்து பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். வண்ண வண்ண நிறங்கள் வாய்ந்த பிளாஸ்டிக் மாலைகள் வந்ததால் நெட்டி மாலைகள் விற்பனை கடந்த காலங்களில் குறைந்து வருகிறது.

இதுகுறித்து மேல வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறுகையில், இந்த மாலை தயார் செய்வதற்கு நாங்கள் வட்டியுடன் தனியாரிடமிருந்து கடன் வாங்கி மூன்று மாதத்திற்கு பிறகு தயார் செய்த மாலைகளை விற்பனை செய்து வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்தி விடுகிறோம். இந்த மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்காவிட்டாலும் பாரம்பரியமாக செய்து வரும் இந்த தொழிலை நாங்கள் தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

Related Stories: