தேனி ஆவின் பணி நியமன அறிவிப்பை திரும்ப பெற வழக்கு இயக்குநர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை, ஜன. 12: தேனி ஆவின் பணி நியமன அறிவிப்பை திரும்ப பெறக் கோரிய வழக்கில் இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவினில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட தேனி ஆவினில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 22 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த நவம்பரில் வெளியானது. தேனி ஆவினில் ஒரு நாளுக்கு 1 லட்சம் லிட்டர் உற்பத்தியானாலும், சுமார் 5 முதல் 6 ஆயிரம் லிட்டர் அளவுக்கே விற்பனை உள்ளது. சுமார் ரூ.2.50 கோடி அளவுக்கு நஷ்டம் உள்ளது. 22 புதிய பணி நியமனங்களால், மாதம் ரூ.5.50 லட்சமும், ஆண்டுக்கு ரூ.6 கோடி அளவுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும். எனவே, தேனி ஆவினில் 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை திரும்ப பெறவும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். மனுதாரர் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி, மேலாளர் மற்றும் உதவி பொதுமேலாளர் ஆகியோரது வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க உள்ளனர். இது விதிக்கு எதிரானது. எனவே, பணி நியமனங்கள் முறையாக நடக்க வாய்ப்பில்லை’ என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், வக்கீல் மாரீஸ்குமார் ஆஜராகி, 6 ஆயிரம் லிட்டர் விற்பனை போக மீதமுள்ள பால் மூலம் நெய், பால்பவுடர், பால்கோவா உள்ளிட்ட இதர பால்பொருட்கள் தயாரித்து விற்கப்படுகிறது. ரூ.7 கோடி வரை கையிருப்பு உள்ளது. இந்த ஆவினுக்கு 97 பேர் பணியில் இருக்க வேண்டும். இருந்தாலும் 48 பேருக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 22 பேருக்கு மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது என்றனர். இதையடுத்து நீதிபதி, ஆவின் இயக்குநர் மனுதாரரை நேரில் அழைத்து விசாரித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: