கடமலைக்குண்டு அருகே சாலையோர செடிகளால் போக்குவரத்துக்கு இடையூறு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

வருசநாடு, ஜன. 12: கடமலைக்குண்டு அருகே, சாலையோரம் வளர்ந்திருக்கும் செடி, கொடிகளால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டுவில் இருந்து குமணன்தொழு, காமன்கல்லூர் வழியாக கோம்பைத்தொழு கிராமம் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. சாலையை முறையாக பராமரிக்காததால், இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், சாலையின் அகலம் குறைந்துள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் வரும்போது, அவைகள் விலகிச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அபாய வளைவுகள் மற்றும்  விபத்து ஏற்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகள் அனைத்தும் செடிகளால் மூடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடமலைக்குண்டு முதல் கோம்பைத்தொழு வரை சாலையில் இருபுறமும் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: