கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கலில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை அதிகாரிகள் அலட்சியம்

கம்பம், ஜன. 12: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில், கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கம்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் மெத்தனத்தால் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். பரிசு தொகுப்பு வழங்கும் நேரம் குறிப்பிடப்படவில்லை. இதனால், கொத்தனார், செங்கல் அடுக்குபவர், பெயிண்டர், எலக்ட்ரிசன், மெக்கானிக் உட்பட 53 வகையான கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களும் பொங்கல் பரிசு வாங்க திரண்டனர். இதனால், கூட்டம் அலைமோதியது. பயனாளிகள் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிச் சென்றனர். இதைப்பார்த்த போலீசார் பின்னர் கயிறு கட்டி வரிசையாக செல்ல அனுமதித்தனர். இது குறித்து கட்டுமான தொழிலாளர்கள் கூறுகையில், ‘ரேஷன் கடை போல டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்கினால், கூட்டம் கூடாது. கொரோனா தொற்றும் பரவ வாய்ப்பு உருவாகாது’ என்றனர்.

Related Stories: