×

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.1.45 கோடி கஞ்சா பறிமுதல்

 

* 2 வடமாநில கடத்தல் பயணிகள் சிக்கினர்
* 2805 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளும் சிக்கின

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ட் அதிகாரிகள் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை ஏர்இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மலேசியா வழியாக, இந்தியாவின் வடமாநில ஆண் பயணி ஒருவர், இந்த விமானத்தில் சென்னைக்கு வந்தார்.

ஏர்இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர். அந்த பயணியின் சூட்கேசுக்குள் கருப்பு கார்பன் பேப்பரால் சுத்தப்பட்ட 7 பார்சல்கள் இருந்தன. அவைகளை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதற்குள் பதப்படுத்தப்பட்ட கஞ்சா 3.42 கிலோ மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.2 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த வட மாநில பயணியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, லயன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு ஆண் பயணி, சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு விமானத்தில் திரும்பி வந்தார்.

அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடைமைகளை சோதித்தனர். அதற்குள் மூன்று பார்சல்களில் 700 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த வடமாநில பயணியையும் கைது செய்து கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சுற்றுலா பயணியாக சென்னைக்கு வந்திருந்தார். அவர் மீது ஏர்இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, மலேசிய நாட்டு ஆண் பயணியின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர் வைத்திருந்த பைகளில் அரிய வகை சிவப்பு காது நட்சத்திர சிறிய ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் பைகளில் இருந்து 2,805 சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் மலேசிய நாட்டு சுற்றுலா பயணியை வெளியில் அனுமதிக்காமல் விமான நிலையத்துக்குள் நிறுத்தி வைத்து, தொடர்ந்து விசாரித்தனர். அப்போது இந்த அபூர்வ வகை சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் முறையான அனுமதி இன்றி, மருத்துவ பரிசோதனைகளும் இல்லாமல் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் எந்த நாட்டில் இருந்து, எந்த விமானத்தில் வந்ததோ அதில் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். இதற்கான செலவுகளை இந்த அபூர்வ வகை சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த மலேசிய நாட்டு பயணியிடம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதோடு சட்ட விரோதமாக, வெளிநாட்டிலிருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த மலேசிய பயணியை, சுங்க சட்ட விதிமுறைகளின் படி சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Ganja ,Thailand ,Chennai ,Chennai airport ,Chennai airport… ,
× RELATED களியக்காவிளை அருகே பாரில் மோதல் பாஜ...