மழை நீரில் மூழ்கி மீண்டும் முளைத்த பயிருடன் விவசாயிகள் மனு முழு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை/தேவகோட்டை, ஜன.12: விளைந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி மீண்டும் முளைத்துள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மனு அளித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வடியாமல் வயல்களிலேயே தேங்கி நிற்கிறது. பல நாட்கள் நீரில் மூழ்கி இருக்கும் பயிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பயிர்களை அறுக்க முடியாமல் முழுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இளையான்குடி தாலுகா சாலைக்கிராமம், சாத்தனூர், புதுக்கோட்டை, சூராணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள், காளையார்கோவில் தாலுகா புதுக்கிளுவிச்சி, ஒய்யவந்தான், மாரந்தை, சொக்கபடப்பு, ஏரிவயல், காஞ்சரம், சாக்கூர் மற்றும் சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், இம்மாவட்டத்தில் விவசாயம் எப்போதும் வறட்சியால் பாதிக்கப்படுவதே வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி முளைத்துவிட்டன.

இனி இந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாது. அனைத்தும் வீணாகிவிட்டது. எனவே பயிர்களுக்கு முழுமையான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றனர். தேவகோட்டை: இதேபோல் தேவகோட்டை தாலுகா முப்பையூர் குரூப் முப்பையூர், மேக்காரைக்குடி, வெட்டிவயல், கடையனேந்தல், வாயுலானேந்தல் மற்றும் அதனை சுற்றி உள்ள விளை நிலங்களில் பயிர்கள் மழைநீரில் மிதக்கிறது.

அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று தேவகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். தாலுகா அலுவலகத்தில் அளித்த மனுவில், எங்களது பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் நீரில் மிதக்கிறது. பயிர்களும் முளைத்து விட்டது. வாழைத்தோட்டங்கள் அழுகிவிட்டன. நாங்கள் கடும் பாடுபட்டு உழைத்த விவசாயத்தால் தற்போது பெருத்த நஷ்டத்தில் இருக்கிறோம். எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: