ராமேஸ்வரத்தில் தொடர் மழை

ராமேஸ்வரம், ஜன.12: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் நகரில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையினால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வீட்டுக்கிணறுகள், தண்ணீர் குளங்கள், கோயில் தீர்த்தக்கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதுடன், நிலஊற்றும் எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பல மணி நேரம் மிதமான மழை பெய்தது. நேற்றும் பகல் முழுவதும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்ததால் ராமேஸ்வரம் நகரில் நீர்வற்றிய பல இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்க துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று காலை 8 மணி வரை பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் உள்ளிட்ட தீவுப்பகுதியில் மொத்தம் 17 செமீ அளவில் மழை பெய்துள்ளது. நேற்றும் காலை துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் ஊற்று எடுத்துள்ளதுடன் நிலத்தடி நீரும் உயர்ந்து வருகிறது. மழை நீர் தேங்கும் பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் எனபதால் முன்னெச்சரிக்கையாக நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: