×

காஞ்சிபுரம் அருகே சோகம் பாலாற்றில் மூழ்கி வாலிபர் பலி

காஞ்சிபுரம், டிச.2: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் குளித்த வாலிபர், நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணி என்பவரது மகன் சிவா (35). எலக்ட்ரானிக் தராசுகள் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாலை நண்பர்களுடன் மது அருந்திவிட்டு செவிலிமேடு பாலாற்றில் சிவா குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. 4 பேர் ஒன்றாக வந்த நிலையில், 2 பேர் கரையில் அமர்ந்திருக்க, சிவா ஒரு நண்பருடன் பாலாற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் சிவா, குளித்த இடத்தில் இருந்து காணாமல் போனதால் உடன் வந்த நண்பர் அதிர்ச்சி அடைந்து, மற்ற நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக, இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இரவு நேரம் மற்றும் லேசான மழைப்பொழிவும் இருந்ததால் உடனடியாக தேடுதல் பணியை தொடங்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து, நேற்று காலை காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி அலுவலர் சங்கர் தலைமையில், ஊழியர்கள் மாயமான சிவாவை தீவிரமாக தேடி சடலமாக மீட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், உயிரிழந்த சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sogam Pala river ,Kanchipuram ,Sevilimedu Pala river ,Shiva ,Mani ,Pallavar Medu ,
× RELATED தும்பவனம் கால்வாய் பகுதியில் சாலையோர...