நலவாரிய அட்டை வழங்க கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் முற்றுகை

உசிலம்பட்டி, ஜன.12:  உசிலம்பட்டியில் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்குவதற்காக அங்குள்ள தனியார் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்து வந்தனர். அட்டை வழங்குவதற்கு ஆன்லைன் பதிவிற்கு ரூ.350 முதல் ரூ.750 வரை வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக புரோக்கர்கள் சிலர் இருப்பதாகவும், ஆன்லைனில் பதிவு செய்த பிறகு செல்போனிற்கு எஸ்எம்எஸ் வந்த பிறகும் நலவாரிய அட்டை வழங்கவில்லை எனக் கூறி நேற்று உசிலம்பட்டி ஜவுளிக்கடை தெருவிலுள்ள தனியார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நலவாரிய அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் பலர் அலுவலகத்தில் வந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் புதிய அட்டை பதிவு செய்தும் வழங்க வில்லை. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதுபோன்ற ஏமாற்று வேலைகள் நடந்தால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற பதிவுகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: