×

ஒப்பற்ற ஒண்டிமிட்டா ராமாலயம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: கோதண்ட ராமசுவாமி கோயில், ஒண்டிமிட்டா, கடப்பா மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம்.

காலம்: 5ஆம் நூற்றாண்டு, விஜயநகரப்பேரரசு.

ஒண்டிமிட்டாவில் அமைந்துள்ள கோதண்ட ராமசுவாமி கோயில் இந்தியாவின் பேரழகு வாய்ந்த ராமர் கோயில்களில் ஒன்றாகும். ராமரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை சித்தரிக்கும் பல சிற்பங்களைக் கொண்டுள்ளது. 1652-ல் ஒண்டிமிட்டா நகரத்திற்கு விஜயம் செய்த பிரெஞ்சு பயணியான டேவர்னியர் (Jean Baptiste Tavernier), இந்த கோயிலை “இந்தியாவில் உள்ள அழகான ஆலயங்களில் ஒன்று’’ என்று வர்ணித்து, இப்பகுதி மக்களின் இறைபக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு பற்றியும் எழுதியுள்ளார்.

நுணுக்கமான புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள கோபுர நுழைவாயில், 3 கம்பீரமான கோபுரங்கள், 32 அலங்காரத்தூண்களுடன் கூடிய பெரிய மத்திய ரங்க மண்டபம், அப்சரஸ்கள், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் சிறந்த அழகியலுடன் அமைக்கப்பட்டுள்ளன. ராமன் சீதையை மணம் புரிதல், ராமன் அரக்கி தாடகையுடன் போரிடுதல், ராமன் அனுமனிடம் கணையாழி அளித்தல், ராமர் சீதையை மீட்பது பற்றி ஆலோசித்தல், அனுமன் முனிவரிடம் ஆசி பெறுதல், அனுமன் சஞ்சீவி மூலிகை கொண்டு வந்து போர்க்களத்தில் லட்சுமணனை குணமாக்குதல்போன்ற ராமாயண நிகழ்வுகள் தொடர்புடைய பல அழகிய சிற்பங்களை ஆலயமெங்கும் காணலாம். இக்கோயிலின் நேர்த்தியான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டிடக்கலைக்கு நாட்டின் சில கோயில்களை மட்டுமே ஒப்பிட முடியும். ஆனால், இவ்வழகிய சிற்பங்களில் பல அந்நியர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

* ராமர், லட்சுமணன் மற்றும் சீதை சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கோயில் “ஏகசிலா கோயில்’’ என்று அழைக்கப்படுகிறது.

* கருவறையில், ராமர் காலடியில் அனுமன் இல்லாத ஒரே ராமர் கோயில் இதுவாக இருக்கலாம்.

* அருகில் அனுமனுக்கு தனி சந்நதி உள்ளது.

* இந்தியாவில் `ஸ்ரீ சீதாராம கல்யாணம்’ இரவில் கொண்டாடப்படும் சில கோயில்களில் இதுவும் ஒன்று.

* 11 நாள் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும்ஸ்ரீராம நவமி விழா இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

* இவ்வாலயம் இந்திய தொல்லியல் துறையினரால் (ASI) பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக பராமரிக்கப்படுகிறது.

ஒண்டிமிட்டா (VONTIMITTA) ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கடப்பா நகரத்திலிருந்து (கடப்பா – திருப்பதி நெடுஞ்சாலையில்) 25 கிமீ தொலைவில் உள்ளது.

மது ஜெகதீஷ்

Tags : Paparta Ondimita Ramalayam ,Godanda Ramaswamy Temple ,Ondimita, Kadapa District, Andhra Pradesh State ,Vijayanagaraparasu ,Ondimita ,India ,RAMAR ,
× RELATED கொழுமம் தாண்டேஸ்வரர் கோயில்