உண்டியலை திருடியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை பூச்சிநாயக்கன்பட்டி மக்கள் புகார்

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் அடுத்த பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அம்மனுவில், ‘பள்ளபட்டி சந்தன கருப்பசாமி கோயிலில் அனைத்து சமுதாய மக்களும் தொடர்ந்து சாமி கும்பிட்டு வருகின்றனர். இக்கோயிலை பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் மேனேஜராக நிர்வாகம் செய்து வருகிறார். இக்கோயிலின் முன்னாள் நிர்வாகிகள் கடந்த 6 மாதங்களாக தற்போதைய நிர்வாகத்திற்கு இடைஞ்சல் செய்து வந்தனர். இதுகுறித்து ஏற்கனவே திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிச.25ம் தேதி காலை 11.30 மணியளவில் முன்னாள் நிர்வாகிகள், அடையாளம் தெரியாத நபர்களுடன் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து உண்டியலை உடைக்க முயன்றனர். இதை தடுக்க சென்ற சுந்தரராஜை தாக்கி விட்டு, உண்டியலை கடப்பாறையால் இடித்து எடுத்து விட்டு, வேறு ஒரு உண்டியலை வைத்து

சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தோடு உண்டியலை திருடி சென்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர்.

Related Stories: