கிருஷ்ணகிரி, டிச.1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை நீண்ட நேரம் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், காலையில் நடைபயிற்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த 3 நாட்களாக, பகல் நேரத்திலேயே கடும் குளிர் வாட்டியெடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருவதால், ஸ்வெட்டர், கம்பளி, மங்கி குல்லா வரத்து அதிகரித்து விற்பனை சூடுபிடித்துள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி நகரில், பெங்களூரு சாலையில் டான்சி அருகே சாலையோரம் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் காலை முதல் மாலை வரை ஸ்வெட்டர், கம்பளி, மங்கி குல்லா விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனால், வியாபாரிகள் மகழ்ச்சி
அடைந்துள்ளனர்
