அமராவதி முதலை பண்ணையில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

உடுமலை, ஜன.12: அமராவதி முதலை பண்ணையில் சிறுவர் விளையாட்டு திடலுடன் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை அருகே முதலைப்பண்ணை உள்ளது. இதை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்கு 100 முதலைகள் வளர்க்கப்படுகின்றன. அமராவதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் அணையையும், இந்த முதலை பண்ணையையும் பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது, பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு, பண்ணை சுவரில் முதலைகளின் இனம், அவற்றின் வாழ்க்கை முறை குறித்த தகவல் அடங்கிய வண்ண ஓவியங்களில் தீட்டப்பட்டன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில், ரூ.10 லட்சம் செலவில் முதலை பண்ணை வளாகத்தில் சிறுவர் விளையாட்டு திடலுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொம்மைகள், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், நீரூற்றுகள், புல்தரை, பொதுமக்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,`முதலை பண்ணைக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பூங்கா அமைக்கும் பணி முடிந்ததும் இன்னும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

Related Stories: