வடமாநில சிறுமி மாயமான விவகாரம் 9 தனிப்படை அமைத்து விசாரணை

ஊட்டி, ஜன.12: கொலக்கொம்பை பகுதியில் காணாமல் போன வடமாநில பெண் குழந்தையை தேட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி. தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரின் 8 வயது மகள் கடந்த 15 நாட்களுக்கு முன் மாயமானார். சந்தேகத்தின் பேரில், அருகில் இருந்த சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அந்த சிறுமி கிடைக்கவில்லை.  இது குறித்து நீலகிரி எஸ்பி. சசிமோகன் கூறியதாவது: குன்னூர் டி.எஸ்பி. மோகன் நிவாஸ் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்கு தாக்கியிருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரில், ஏற்கனவே, கொலக்கொம்பை சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் மூலமாக சிறுமி சென்றிருக்கலாமா? என்ற சந்தேகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் ரயில் நிலையங்களில் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கண்காணித்து வருகிறோம். மாவட்டத்திற்குள் எங்காவது குழந்தை சென்றிருக்கலாமா? என்ற அடிப்படையில் மாவட்டம் முழுவதும் குழந்தையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கொலக்கொம்பை பகுதியில் பெண் குழந்தை மாயமான குடியிருப்பு அருகே வசித்து வந்த அசோக் என்ற வடமாநில கூலித் தொழிலாளி கடந்த 6ம் தேதி தனது மனைவி, இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இவர்களது மரணம் கொலையா? மற்றும் தற்கொலையா? என்ற விசாரணை மேற்கொண்டதில், அது தற்கொலையே என உறுதி செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைக்கும், அசோக் குடும்பத்தின் தற்கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எனினும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குழந்தை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: