கோடநாடு வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி,ஜன.12: கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. பாதுகாப்பு பணியில் காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்து விட்டு உள்ளே சென்ற கும்பல் பங்களாவில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் தொடர்புடையதாக சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ் சமி, ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அரசு தரப்பு சாட்சி விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள சயான், வளையார் மனோஜ் மற்றும் ஜாமீனில் உள்ள 6 பேர் ஆஜரானார்கள். ஏற்கனவே இரண்டாவது சாட்சி பஞ்சம் விஷ்வகர்மா, மூன்றாவது சாட்சியான சுனில் தாபா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் முதல் சாட்சியான கிருஷ்ண பகதூர் தாபாவிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையார் மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜரானார்கள். கிருஷ்ண பகதூர் தாபாவிடம் மூன்றாவது முறையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் சுந்தரமோகன், நாகராஜ் ஆகியோர் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின் வழக்கின் அடுத்த விசாரணை வரும் 20ம் தேதிக்கு மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா ஒத்தி வைத்தார்.

Related Stories:

>