ஸ்டீல் விலை உச்சத்தால் அரசு கட்டுமான பணிகள் நிறுத்தி இன்று ஸ்டிரைக்

கோவை, ஜன.12:  கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் உதயகுமார்,  செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஸ்டீல் விலை கடந்த மூன்று மாதங்களில் உச்சகட்ட விலை உயர்வை எட்டி உள்ளது. ஒரு டன் 36 ஆயிரம் என இருந்தது. இப்போது ஒரு டன் ஸ்டீல் 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அடிக்கடி பலமுறை விலை உயர்வு செய்யப்படுவதால் கட்டுமான தொழில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஸ்டீல் விலை குறைக்க இந்திய பிரதமர் அலுவலகம், மத்திய  ஸ்டீல் அமைச்சகம், சொத்து குவிப்பு தடுப்பு அத்தாரிட்டி, இந்தியன் காம்பிடேஷன் கம்பெனி ஆப் இந்தியா  உள்பட  பல்வேறு துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் விலை ஏற்றம் குறையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. ஸ்டீல் விலையேற்றம் கண்டித்து

இன்று (12ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். கோவை மட்டுமின்றி மாநில அளவில் உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம் உட்பட அனைத்து முக்கிய அரசு துறைகளிலும் கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணிகள் ஒரு நாள் முழுவதும் நிறுத்தி வைத்து அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தனியார் கட்டுமான அமைப்புகள்,  பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா, கோவை பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் கான்டாக்டர்கள் சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஸ்டீல், சிமெண்ட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து சிண்டிகேட் அமைத்து உச்ச விலை ஏற்றம் செய்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தும் வகையில் ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும். சி.பி.ஐ. ஸ்டீல் நிறுவனங்களுடன் சிண்டிகேட்  போட்டு விலையேற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினால் இதன் பின்னணியில் உள்ள பெரும் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்க விவகாரம் தெரிய வரும்.  ஸ்டீல் விலையை குறைக்காவிட்டால் மத்திய மாநில அரசுகளின் திட்டப்பணிகளை நிறுத்தி வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விலை குறைவு ஏற்பட்டால் மட்டுமே இ-டெண்டர் மூலமாக எடுத்த அரசின் திட்டப்பணிகளை முழுமையாக தாமதமின்றி நடத்தி முடிக்கமுடியும். இப்போதுள்ள விலை ஏற்ற சூழலில் பணிகளை செய்தால் 30 சதவீதம் கூடுதல் செலவீனம் ஏற்படும். எனவே மத்திய மாநில அரசுகள் இந்த விலையேற்றத்தை குறைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>