×

ஒப்பந்த சாகுபடி சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன. 12: தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் மற்றும் நாட்டு மாடுகளை அழிக்கும் கால்நடை இனப்பெருக்கச் சட்டம் ஆகிய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளை சிதைக்கும் உத்தரவுகளை வாபஸ் பெறவேண்டும். மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களில் இருந்து தமிழக விவசாயிகள், நுகர்வோரை பாதுகாக்க சிறப்பு சட்டங்களை இயற்றவேண்டும். கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, கரும்பு விவசாயிகளின் பாக்கித் தொகையை தராத ஆலைகளின் சொத்துக்களை விற்று, பாக்கித் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தமிழக விவசாய சங்க அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது. தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி, பொருளாளர் லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரகுராமன், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அரச்சலூர் செல்வம், கிருஷ்ணமூர்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...