×

ஓரினச்சேர்க்கை தகராறில் ஆசிரியர் ஓட, ஓட வெட்டிக்கொலை: ரவுடி, 17 வயது சிறுவன் கைது, தென்காசி அருகே பயங்கரம்

தென்காசி: ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் பள்ளி ஆசிரியர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடி, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சுதந்திரகுமார் (43). இவரது பூர்வீகம் குமரி மாவட்டம் நாகர்கோவில். சுதந்திரகுமாரின் சகோதரிகள் இருவரும், கரடிகுளத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரை திருமணம் செய்துள்ளனர்.

இதனால் சுதந்திரகுமார் மற்றும் அவரது பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கரடிகுளம் அருகே சி.ஆர்.காலனியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்காக 5 மாதமாக விடுமுறை எடுத்து படித்து கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு சி.ஆர்.காலனியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தென்காசி மாவட்ட எல்கையான ஆலங்குளம்- பழங்கோட்டை சாலையில் சுதந்திரகுமாரை மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். சாலையோரம் கிடந்த சுதந்திரகுமார் சடலத்தை குருவிகுளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மதுபாட்டில்களும் கிடந்தது.

எனவே மர்மநபர்கள், போதையில் ஆசிரியர் சுதந்திரகுமாரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, கொலையாளிகள் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சுதந்திரகுமார் செல்போனில் கடைசியாக யார், யாரிடம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

அப்போது அஜித்குமார் உள்பட இருவரிடமும் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சுதந்திரகுமாரை இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘சுதந்திரகுமாருக்கும், நாலாட்டின்புத்தூர் அருகே ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் அஜித்குமார் (28), 17 வயது சிறுவனுக்கும் இடையே ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை சுதந்திரகுமார், கரடிகுளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் இருவரையும் வருமாறு கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுதந்திரகுமாரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு இருவரும் பதற்றத்தில் பைக்கை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதனாலும், செல்போன் உரையாடலை வைத்தும் சிக்கிக்கொண்டனர்.

அஜித்குமார் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் இருந்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்’ என்றனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த குருவிகுளம் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* தூத்துக்குடியில் வியாபாரி அடித்துக்கொலை
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜன் (50). கடலை மிட்டாய் வியாபாரி. இவரது மனைவி இறந்துவிட்டார். 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 27ம்தேதி நாகராஜனின் பேத்திக்கு சடங்கு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக நாகராஜன் 28ம்தேதி நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார்.

அப்போது அதேபகுதியைச் சேர்ந்த வேன் டிரைவரான ஜெய்சங்கர்(27) என்பவர் நேற்று முன்தினம் நாகராஜன் வீட்டுக்கு சென்று, பேத்தி சடங்குக்கு அனைவருக்கும் மதுவிருந்து கொடுத்துள்ளீர். எனக்கும் மது வாங்கி தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் நாகராஜன் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் கத்தியால் நாகராஜனை குத்தியதுடன், அங்கு கிடந்த உலக்கையால் அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிந்து, நாசரேத் அருகே வெள்ளமடம் பெட்ரோல் பங்க் அருகே பதுங்கி இருந்த ஜெய்சங்கரை நேற்று கைது செய்தனர்.

Tags : Rawudi ,Tenkasi ,Karadikulam C. ,Tuthukudi District ,Kagugamalai R. ,Sudantra Kumar ,
× RELATED களியக்காவிளை அருகே பாரில் மோதல் பாஜ...