×

கோவையில் 13 வீடுகளில் அடுத்தடுத்து கைவரிசை 3 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு: காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது அதிரடி

கோவை: கோவை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன், 3 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி 3 பிளாக்கில் 10 வீடுகளிலும் என திருட்டு சம்பவம் நடைபெற்றது.

இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் மாலை தெரியவந்தது. கவுண்டம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நில எடுப்பு பிரிவு வருவாய் அலுவலர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு நடந்ததும், மற்ற வீடுகளையும் சேர்த்து மொத்தம் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பணம்,3 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டதும், கொள்ளையர்கள் ஆட்டோவில் வந்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள குடியிருப்பில் சி பிளாக்கில் ஒரு வீட்டில் திருட்டு நடைபெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்களை பிடிக்க சரவணம்பட்டி, துடியலூர், கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 3 தனிப்படை போலீசார் தீவிர வேட்டை நடத்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் பேக்குடன் செல்வது பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அந்த நபர்களின் விவரங்களை சேகரித்தனர். இதில் கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர். அவர்கள், கோவைப்புதூரை அடுத்த குளத்துப்பாளையம், திருநகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்றனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் அரிவாளால் போலீஸ்காரர் பார்த்தீபனை வெட்டினார். இதில், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் 3 பேரையும் வலது காலில் சுட்டுபிடித்தனர். காயம் அடைந்த கொள்ளையர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான் (48), கல்லூ ஆரிப் (60), ஆசிப் (45) என்பது தெரியவந்தது.

* பாத்திர வியாபாரிகள் போல் நோட்டம் 12 பேரிடம் விசாரணை ; கமிஷனர்
கோவை போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொள்ளையர்கள் 3 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். குனியமுத்தூர் பகுதியில் இவர்கள் ஊரை சேர்ந்த 12 பேர் ஒரே வீட்டில் தங்கி உள்ளனர். பாத்திர வியாபாரம் செய்யும் அவர்களிடம் இவர்கள் துணி வியாபாரம் செய்ய வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 56 பவுன் கொள்ளை போனதாக தகவல் வெளியானது.

ஆனால் 42 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி மட்டுமே கொள்ளை போய் உள்ளது. அதில் 32 கிராம் கவரிங், பணம் ரூ. 1.50 லட்சம். இவை அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்தில் கொள்ளை அடித்து சென்று உள்ளார்கள். இவர்களுடன் தங்கி இருந்த 12 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் வந்த ஆட்டோவின் டிரைவர் பங்களிப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : Northern ,Goa ,Housing Welfare Board ,
× RELATED களியக்காவிளை அருகே பாரில் மோதல் பாஜ...