நாகர்கோவிலில் கறிக்கோழி கிலோ ₹91க்கு விற்பனை பறவைகாய்ச்சல் பீதியால் நுகர்வு குறைவு

நாகர்கோவில், ஜன.11: கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதால் அங்கிருந்து இறைச்சிக்கோழி, முட்டை போன்றவற்றை எடுத்துவர கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை உட்பட தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து காலியாக வருகின்ற சரக்கு வாகனங்களுக்கு மருந்து தெளிக்கின்றனர்.

 மேலும் இறைச்சி கோழிகளுடன் வருகின்ற வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் நாகர்கோவிலில் ஒரு கிலோ ₹126 வரை விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலை சரிவை சந்தித்துள்ளது. தற்போது நாகர்கோவில் பகுதியில் ஒரு கிலோ கறிக்கோழி ₹91க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் நுகர்வு அதிகரிக்கவில்லை. கறிக்கோழி கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஒரே விலையில் கறிக்கோழி விற்பனையாகிறது.  பறவை காய்ச்சல் பீதி காரணமாக கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளதும், கேரளாவிற்கு கறிக்கோழி லோடு செல்லாததால் இறைச்சிக்கோழி தேக்கம் அடைந்துள்ளதும் விலை சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் பறவை காய்ச்சல் பரவல் ஏற்பட்ட நிலையில் நாகர்கோவில் பகுதிகளில் விலை சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ கறிக்கோழி ₹35 வரை விற்பனையானது.

மேலும் கறிக்கோழி உணவுகளை சமைத்தும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் பணிகளில் பண்ணையாளர்கள் ஈடுபட்டனர்.  பறவை காய்ச்சலை பரப்பும் கிருமிகள் 60 டிகிரி வெப்பத்தில் அரை மணி நேரத்தில் அழிந்துபோகும் என்றும், பறவை காய்ச்சல் பரப்புகின்ற எச்5என்8 வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக கண்டறியப்படவில்லை. இறைச்சி கோழிகளையும், அவற்றை இறைச்சியாக தயார் செய்யும்போதும்  கைகளை சோப்பும், தண்ணீரும் பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Related Stories: