திருப்பதிசாரத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் 16 வகை பாரம்பரிய நெல் ரகங்கள் ஆய்வு புதிய ரக கண்டுபிடிப்புக்கான ஆயத்த பணிகள் தீவிரம்

நாகர்கோவில், ஜன.11 : திருப்பதிசாரத்தில் உள்ள வேளாண்  ஆராய்ச்சி மையத்தில் 16 வகையிலான பாரம்பரிய நெல் ரகங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.  மேலும் புதிய ரக நெல் கண்டுபிடிப்புக்கான ஆயத்த பணிகளும் நடக்கின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. குறைந்த நாட்கள், குறைந்த செலவில் அதிக விளைச்சலை கொடுக்கும் வகையிலான ரகங்களை கண்டுபிடிப்பது தான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் பணி ஆகும். டிபிஎஸ் 5 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எந்த புதிய ரகங்களையும் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்க வில்லை. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆராய்ச்சி நிலையம் வெறும் காட்சி நிலையமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மெல்ல, மெல்ல புதிய ரக கண்டுபிடிப்புகள் தொடங்கி உள்ளன. தற்போது டிபிஎஸ் 08 ரக உருவாக்கத்துக்கான ஆயத்த பணிகள் நடக்கின்றன. குமரி மாவட்ட விவசாயிகள் அதிகம் விரும்பும் குண்டுரக அரிசியை போல் சுவை கொண்ட இந்த ரக அரிசி,  வழக்கமான குண்டு ரகத்தை போல் இல்லாமல் சற்று மாறுபாடானதாக இருக்கும் ஆராய்ச்சி என்று நிலைய பணியாளர்கள் கூறினர்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை டிபிஎஸ் 5, அம்பை 16 ரக நெல் ரகங்கள் தான் அதிகம் விரும்பப்படும். தற்போது இதற்கு மாற்றாக டிபிஎஸ் 08 ரக நெல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சார்த்த முறையில் புத்தளம் பகுதியில் சில விவசாயிகளுக்கு நடவு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என  ஆராய்ச்சி நிலைய பணியாளர்கள் கூறினர். இது குறித்து உதவி பேராசிரியர் (பயிர் மரபியல்) லதாவிடம் கேட்ட போது அவர் கூறியது: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நடவடிக்கையில், திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வேகமாக இவற்றை செய்ய முடியாது. ஒவ்வொரு கட்டத்தையும் மிக தெளிவாக ஆராய்ந்து தான் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். தற்போது கட்டிச்சம்பா, தட்டார வெள்ளை, கொச்சி சம்பா, கொல்லம் சம்பா,  கொட்டார சம்பா உள்பட 16 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. இந்த ரக நெல் அதிக உயரம் கொண்டதாக இருப்பதால், சில சமயங்களில் உடைந்து விடும் என்பதால், விவசாயிகள் இதை பயிரிட அச்சப்படும் நிலை உள்ளது. சேதம் இல்லாமல் எவ்வாறு இந்த நெல் ரகங்களை பயிரிட முடியும் என்பது பற்றி பரிசோதனை  செய்கிறோம். தேவையான அளவு நிதி பெற்று,  ஆராய்ச்சி பணிகள் தீவிரப்படுத்தப்படும். விவசாயிகளுக்கான பல்வேறு சந்தேகங்களையும் நிவர்த்தி செய்கிறோம் என்றார்.

Related Stories:

>