பொங்கல் பரிசுத்தொகையை வாங்க மறுத்த சமூக சேவகர்

ஆத்தூர், ஜன.11: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து. சமூக சேவகரான இவர், மதுவிலக்கினை அமல்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஐந்தாண்டு காலத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறையும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகையை வாங்க மறுத்து, அதனை திருப்பித் தருவதாக தமிழக முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு பதவி ஏற்றபோது 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார். ஆனால், தற்போதைய அதிமுக அரசு அதனை செயல்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சந்து கடைகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் மது விற்பனை மூலை முடுக்குகளில் கூட நடந்து வருகிறது. இதனை கண்டித்து தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பொருட்களை எனது குடும்ப அட்டைக்கு வாங்காமல் புறக்கணிக்கிறேன்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: