ஓய்வு பெற்றவருக்கு ஒப்பந்த ஓட்டுனர் பணி

தம்மம்பட்டி, ஜன.11: ஆத்தூர் சுகாதார மாவட்டம், தம்மம்பட்டியில் 33 படுக்கை வசதியுடன் கூடிய வட்டார தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய்- சேய்களை, அவர்களது வீடுகளுக்கே அழைத்துச்செல்ல, ஜேஎஸ்எஸ்கே திட்டத்தில் அரசு வாகனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை இயக்க ₹15,500 என்ற மதிப்பூதியத்தில், ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவர்.  இப்பணிக்காக தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காத்திருந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்று, மாதந்தோறும் ஓய்வூதியம் மூலம் பலனடைந்து வருபவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுபவருக்கு, மதிப்பூதியம் பெறும் பணியையும் வழங்கி இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த பணிக்காக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: