கோழிப்பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு

நாமக்கல், ஜன.11: கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பரவியது. இதையடுத்து கால்நடை பராமரிப்புத் துறையினர், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை, கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கிறார்கள். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள அதிவிரைவு குழுவினர் ஒவ்வொரு பண்ணையாக சென்று, உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறர்கள். இதுதவிர கோழிகளுக்கு ரத்த மாதிரிகளும் எடுத்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கோழி மற்றும் முட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மூலம் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். எனவே, கோழிப்பண்ணைக்குள், புதிய பறவைகள் வராமல் பார்த்து கொள்ளும்படி பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவைகள் கோழி எருவில் உள்ள புழுக்களை சாப்பிட வருகிறது. பண்ணைகளில் கோழி எருக்களை அப்புறப்படுத்தி விடவேண்டும். அதிகம் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>