- அமைச்சர் E.V.Velu
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா
- கார்த்திகை தீபத்திருவிழா
- திருவண்ணாமலை
திருவண்ணாமலை, நவ. 29: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா விபரங்களை பக்தர்கள் தெரிந்துகொள்ள வசதியாக, புதிய செல்போன் செயலியை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீபத்திருவிழா தகவல்களை முழுமையாக பக்தர்கள் அறிந்துகொள்ள வசதியாக, கார்த்திகை தீபம் 2025 எனும் செல்போன் செயலியை (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, செல்போன் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. எம்பி சி.என்.அண்ணாதுரை, மேயர் நிர்மலாவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தீபத்திருவிழா செல்போன் செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். இந்த செயலியில், தற்காலிக பஸ் நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் நிலையங்கள், காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி 108 ஆம்புலன்ஸ், அவசர மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இருக்கும் இடங்கள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கான கட்டுபாட்டு அறை உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோயில் பற்றிய விவரங்கள் ஆகியவைகளையும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தீபம் நகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரங்களையும், 22 பழங்குடியின மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளையும் அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, திருவண்ணாமலை தாலுகா அத்தியந்தல் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட அடிஅண்ணாமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஆர்டிஓ ராஜ்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
