மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கோபுரங்களில் முளைத்த செடி, கொடிகள் கட்டுமானம் பலவீனமடையும் அபாயம்

மன்னார்குடி, ஜன.11: மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத் தலமாக ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோயிலின் நுழைவு வாயிலில் பிரமாண்டமான ராஜகோபுரம் உள்பட பிரகாரத்தில் 7 தூண்கள், 24 சன்னதிகள், 7 மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த கோயில் சுண்ணா ம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125ல் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு என காலம் காலமாக பெருமையாக பேசப்பட்டு வரும் ராஜகோபால சுவாமி கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோயில் செயல்அலுவலராக சங்கீதா உள்ளார். இந்திய அளவில் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைந்த அளவே செய்து தரப்பட்டுள்ளதாக பக் தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ராஜகோபால சுவாமி கோயிலின் நுழைவு வாயிலில் இருக்கும் பிரமாண்டமான ராஜகோபுரம் உள்ளிட்ட கோயிலை சுற்றியுள்ள கோபுரங்களில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.

கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களின் இடுக்குகளில் சிறிய அளவிலான மரங்கள் வளர தொடங்கியுள்ளன. இதனால் கோபுரங்களின் ஸ்திர தன்மை சிதில மடைய துவங்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால் கோபுரங்களின் கட்டுமானம் பாதிப்படைந்து பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டு அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது வேதனையை அளிப்பதாக பக்தர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கூறு கின்றனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள் இக்கோயிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கோபுரங்களில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தியும் தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மீனாட்சி சூர்யபிரகாஷ் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்னகத்தின் தட்சிண துவாரகை என்றழைக்கப்படும் பெருமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட ஏனைய கோபுரங்களில் செடி, கொடிகள் முளைத்து ஓராண்டு ஆகிறது. இதனால் கோபுரத்தின் கட்டுமானம் பலவீனமடையும் ஆபத்து உள்ளது.

அதனை சீரமைக்க பக்தர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. கோயிலின் உள் வளாகத்தை சுற்றி வரும் பாதைகளில் தேவையற்ற செடி, கொடிகள் மண்டி புதர்கள் போல் காணப்படுகிறது. விஷஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் அந்த பாதையை பயன்படுத்தும் பக்தர்கள் அச்சப்பட்டுக்கொண்டே செல்கின்றனர். எனவே, இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதோடு பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: