கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலை

கொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் பகுதியில் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளை சேர்ந்த 200 கிராமங்கள் உள்ளன. இந்த அனைத்து கிராமங்களிலும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு அரசின் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது அனைத்து தொகுப்பு வீடுகளும் சேதமடைந்து மழைநீர் ஒழுகி வீட்டுக்குள் புகுந்து விடுவதால் இந்த வீடுகளுக்குள் வசித்துவரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வசித்து வருகின்றனர். மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இந்த தொகுப்பு வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வீட்டிற்குள் வசிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளில் 25 வருடங்களுக்கு முன்பு அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வீடுகள் திடீரென இடிந்து விழுந்தால் வீட்டிற்குள் வசிப்பவர்களின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து ஏற்படலாம். கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் இடிந்து விழும் நிலையில் உள்ள அனைத்து கான்கிரீட் வீடுகளையும் இடித்து அகற்றி விட்டு புதிய கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: