2020ம் ஆண்டில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் எஸ்பி தகவல்

சிவகங்கை, ஜன.11: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 2020ம் ஆண்டு கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 263 வழக்குகளில் 123 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.55 லட்சத்து 47 ஆயிரத்து 720 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை தடுப்பு குற்றத்தில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 940 மதிப்புள்ள 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2020ம் ஆண்டில் கூடுதலாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 126 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பாக 196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனல். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 361 பேர் கைது செய்யப்பட்டு 406 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2020ம் ஆண்டு தீவிர நடவடிக்கையால் மணல் திருட்டு குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Related Stories: