சென்னை மாநகராட்சிக்கு பிரத்யேக வாகன நிறுத்த கொள்கையை உருவாக்க திட்டம்: விரைவில் வெளியாக வாய்ப்பு

சென்னை, ஜன.11: சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே உள்ளது. இதை குறைக்கவும், வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தி.நகரில் பல் அடுக்கு வாகன நிறுத்த திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. உத்தமர் காந்தி சாலையில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. இதேபோல், ஸ்மார்ட் சிட்டி நிதி மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. சாலையின் ஓரங்களில் உள்ள இடங்களை கண்டறிந்து வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ேமம்படுத்துவது இதன் நோக்கமாகும். இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள வாகன நிறுத்தங்களை ஒருங்கிணைந்து வாகன நிறுத்த கொள்கையை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு ெசய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் வாகன நிறுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது 3000 வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளது. இதை 12 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

300 சாலைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தின் கீழ் 60 இடங்களில் பல்வேறு வகையிலான வாகன நிறுத்தங்களை அமைக்கப்படவுள்ளது. இதற்கு இடங்களை கண்டறியும் பணி நிறைவடைந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சென்னை மாநகராட்சி என்று பிரத்யேக வாகன நிறுத்த கொள்கை தயார் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: