திருவள்ளூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி: 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவள்ளூர்,  ஜன. 11:  திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் காலனி, பெருமாள் கோயில்  தெருவில் வசித்து வந்தவர் சிகாமணி (58) கூலி தொழிலாளி. இவரது மனைவி  தீபாஞ்சி (54). இவர்களது மகன் டில்லிபாபு (33). டில்லிபாபு மனைவி  நிஷாந்தினி (30). இவர்களது குழந்தை ஹரீஷ் (2). இவர்கள் கூரை வீட்டில்  வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் ஈரத்தில் நனைந்து முன்பக்க சுவர் சரிந்து கீழே விழுந்து விட்டது. இந்த சூழ்நிலையில்  நேற்று முன்தினம் இரவு டில்லிபாபு வேலைக்கு சென்று  விட்டார். மேலும் 4 பேர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணி  அளவில் திடீரென பின்பக்க சுவரும் இடிந்து  சரிந்தது.

இதில்  சிகாமணி மட்டும் படுகாயமடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பீரோ மீது சுவர்  சரிந்ததால் தூங்கிக்கொண்டு இருந்த மீதி மூன்று பேர் லேசான  காயத்துடன் உயிர் தப்பினர். சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த  சிகாமணியை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று  முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர்  பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மணவாள நகர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>