பாஜ சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி, ஜன.11: கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் ஏகவள்ளியம்மன்  கோயிலில் நம்ம ஊர் பொங்கல் விழா நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். இதில் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்  வைப்பதற்காக வந்திருந்தனர். பொங்கல் விழாக்களில்  மண் பானைகளை கொண்டு கலாச்சாரப்படி பொங்கல் வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பொங்கல் விழாவில் வழக்கத்திற்கு மாறாக  எவர்சில்வர் பாத்திரத்தில் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கலாச்சாரப் பண்பாட்டிற்கு மாறாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பார்த்து விழாவில் கலந்து கொண்ட பலர் முகம் சுளித்தனர். மேலும் பொங்கல் வைக்க எவர்சில்வர்  பாத்திரங்கள் பலருக்கு கிடைக்கவில்லை. இதனால் நிர்வாகிகளுடன் விழாவில் கலந்துகொண்ட பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பாஜக நிர்வாகிகள் சிலர், எவர்சில்வர் பாத்திரங்களை கொண்டு வந்து விநியோகித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதனை பெற ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உண்டானது.

Related Stories: