24 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை 109 மருந்து கிடங்குகள் தயார் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில்

வேலூர், ஜன.8: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 23 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வரும் 13ம் தேதி முதல் விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 13ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் ஏற்கனவே 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இன்று அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி ஒத்திகை நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளில் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வேலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவது: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை, சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், வடுகன்தாங்கல் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கணியம்பாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் ஒத்திகை தொடங்கும். இந்த ஒத்திகையில் காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது?, தடுப்பூசி போட வரும்போது அனைத்து வசதிகளும் இருக்கிறதா?, ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடும்போது எவ்வளவு நேரம் ஆகும்? என்பது போன்ற ஒத்திகை நடைபெறும். மாவட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு சொந்தமான 2 குளிர்சாதன மருந்து சேமிப்பு கிடங்குகள், மண்டல மருந்து சேமிப்பு கிடங்கில் ஒரு இடத்திலும் குளிர்சாதன கிடங்காக உள்ளது. இதை தவிர மண்டல மருந்து சேமிப்பு கிடங்குகள் 4 இடங்களிலும், மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்குகள் 5 இடங்களிலும், 4 அரசு மருத்துவமனைகளில் 8 கிடங்குகளும், 6 ேமம்படுத்தப்பட்ட சுகாதாரநிலையங்களில் 12 கிடங்குகளும், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 52 கிடங்குகளும், 13 நகரப்புற சுகாதார நிலையங்களில் 25 கிடங்குகளும் உள்ளது.

இதில் 3 இடங்களிலும் குளிர்சாதன கிடங்குகள் என மொத்தம் 109 மருந்து கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசியை அரசு வழங்கிய உடன் உடனடியாக முன்கள பணியாளர்களுக்கு வழங்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா தலைமை மருத்துவமனை, புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், அம்மூர் ஆரம்ப சுகாதார நிலையம், ராணிப்பேட்டை எஸ்எம்எச், ஆற்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மாவட்ட சுகாதார துறை இயக்குனர்(பொறுப்பு) வீராசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆம்பூர் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி அரசு மருத்துவமனை, மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கெஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் ஒத்திகை நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையம், காட்டாம்பூண்டி ஆரம்பசுகாதார நிலையம், போளூர் அரசு மருத்துவமனை, அத்தியந்தல் தனியார் மருத்துவமனை, செய்யாறு அரசு மருத்துவமனை, பெருங்கட்டூர், ஆரணி ஆரம்ப சுகாதார நிலையம், செய்யாறு தனியார் மருத்துவமனை உள்பட 9 இடங்களிலும் ஒத்திகை நடைபெகிறது. இந்த ஒவ்வொரு மருத்துவமனையிலும் 25 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: