113 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தம் சேல்ஸ்மேன்கள் போராட்டத்தால் பரபரப்பு ஊழியரை தாக்கிய அதிமுக கவுன்சிலரை கண்டித்து

தண்டராம்பட்டு, ஜன.8: ரேஷன் ஊழியரை தாக்கிய அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கண்டித்து, தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள 113 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் சேல்ஸ்மேன்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த டி.வேலூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ்(31) என்பவர் சேல்ஸ்மேனாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார். இதையறிந்த அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளரும், 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான கார்த்திகேயன்(48) என்பவர் ரேஷன் கடைக்கு வந்து, ‘ஆளுங்கட்சி கவுன்சிலரான எனக்கு தகவல் தெரிவிக்காமல், எப்படி பொங்கல் பரிசு தொகுப்பு தருகிறாய் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர், சேல்ஸ்மேனை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுரேஷ் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் தானிப்பாடி எஸ்ஐ முத்துசாமி விசாரணை நடத்தினார். சேல்ஸ்மேன் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்த, தானிப்பாடி கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள 19 ரேஷன் கடைகளிலும் நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சேல்ஸ்மேன்கள் நிறுத்திவிட்டு கடையை பூட்டிவிட்டனர்.

இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சேல்ஸ்மேன்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள 113 ரேஷன் கடைகளில் நேற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்காமல் சேல்ஸ்மேன்கள் கடையை பூட்டிவிட்டனர். தொடர்ந்து, ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தாலுகா செயலாளர் சேகர் தலைமையில் தானிப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து, கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, தானிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பாதிக்கப்பட்ட சேல்ஸ்மேன் சுரேஷ் மற்றும் அவருக்கு ஆதரவாக ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சேல்ஸ்மேன்களிடம் சங்க தலைவர் அருண்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், எந்த தீர்வும் கிடைக்காததால் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள 113 ரேஷன் கடைகளிலும் நேற்று பொங்கல் பரிசு ெதாகுப்பு விநியோகம் நடக்கவில்லை. பின்னர் பிற்பகல் 3 மணியளவில் கண்துடைப்புக்காக ஒருசில நியாயவிலை கடைகளில் மட்டும் பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக கணக்கு காட்டியுள்ளனர். இதையடுத்து மாலை 5 மணியளவில் தண்டராம்பட்டு வட்ட வழங்கல் அலுவலரிடம், விற்பனையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திர ராஜா, மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் சண்முகம், பொருளாளர் சங்கர் ஆகியோர் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் தாலுகா அலுவலகம் முன் வந்து போராட்டம் நடத்த தயார் நிலையில் இருந்த விற்பனையாளர்களிடம் பாதிக்கப்பட்டவர் போலீசில் கொடுத்த புகாருக்கு சிஎஸ்ஆர் கிடைக்கவில்லையென்றால் போராட்டத்தை தொடரலாம் என தெரிவித்தனர். இதையடுத்து விற்பனையாளர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சுரேஷை பார்க்க சென்றனர். ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ரேஷன் கடை சேல்ஸ்மேன்களின் போராட்டத்தால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>