ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை, ஜன.8: போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை அனைத்து தொழிற்சங்கத்தினர் ெதாடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட முக்கிய தொழிற்சங்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காமல், அரசுக்கு ஆதரவான பதிவு செய்யப்பட்ட சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதையும், நியாயமான தீர்வு காணாமல் அலைக்கழிப்பதை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு, தொமுச மாநில செயலாளர் க.சவுந்திராஜன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், சிஐடியு நாகராஜன், சேகர், ஏஐடியுசி ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, காலை 10 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலை வரை நீடித்தது. இது குறித்து, தொமுச மாநில செயலாளர் க.சவுந்திராஜன் தெரிவித்ததாவது: போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு முன்வராமல் தொடர்ந்து அலைகழிக்கிறது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு, அரசுக்கு ஆதரவான தொழிலாளர்களின் வலிமையில்லா சில சங்கங்களை அழைத்து பேசுவதன் மூலம், வலிமை மிக்க சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தவிர்க்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

அதோடு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 972 கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை, முறையாக சம்மந்தப்பட்ட கணக்குகளில் வரவு வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதையும் அரசு நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: