×

விவசாயிகள் போராடி வரும் நிலையில் 3 வேளாண் சட்டங்களால் வடமாநிலத்துக்கே பாதிப்பாம்: அடித்துச்சொல்கிறார் எடப்பாடி

 

ஓமலூர்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களால் வடமாநிலங்களுக்கே பாதிப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டிஜிபியை நியமிக்காமல், பொறுப்பு டிஜிபியை நியமிக்கிறார்கள். உச்சநீதிமன்றம் 3 வாரத்திற்குள் டிஜிபியை நியமிக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர் செய்யப்பட்ட நிலத்தில், விளைச்சல் எவ்வளவு இருக்கிறது என்பது அதிகாரிகளுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது, முன்கூட்டியே திட்டமிட்டு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான் நேரடியாக விவசாயிகளை சந்தித்து பிரச்னைகளை கேட்டேன். நான் விவசாயி; இது எல்லோருக்கும் தெரியும். நான் முதல்முதலாக எம்எல்ஏ ஆனதில் இருந்து, இதுவரை விவசாயம் செய்து வருகிறேன். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் தமிழகம் பாதிக்காது. வடமாநிலங்களில் தான் பாதிப்பு ஏற்படும். அவர்கள் தான் மண்டி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தான் எனக்கு ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு என்ன லாபம் என்று தான் பார்க்க வேண்டும். 22 சதவீத ஈரப்பதத்தை ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சி தான் போராடி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜால்ரா போடும் கட்சி நாங்கள் இல்லை. எஸ்.ஐ.ஆர்-ல் என்ன பிரச்னை இருக்கிறது?. மாவட்ட கலெக்டர்கள் தான் செயல்படுத்தி வருகிறார்கள்.

நேர்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். ஒன்றிய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் எடப்பாடி ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் இணைப்பா? காலம் கடந்துவிட்டது
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைப்பு குறித்து கேட்டதற்கு, ஏற்கனவே அரைச்ச மாவையே அரைக்கிறீர்கள். இதெல்லாம் காலம் கடந்து முடிந்து விட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags : northern ,Edappadi ,Omalur ,Edappadi Palaniswami ,Union government ,Omalur, Salem district ,AIADMK ,General Secretary ,DGP ,Tamil Nadu ,DGP… ,
× RELATED கழகத்தின் முன்னோடி...