புனரமைப்பு பணி முடிந்தும் மண்ணை அள்ளாததால் மோகனூர் வாய்க்காலில் 3 மாதமாக தண்ணீர் வரவில்லை

நாமக்கல், ஜன.8: புனரமைப்பு பணி முடிந்தும் மண்ணை அள்ளாததால், மோகனூர் வாய்க்காலில் 3 மாதமாக தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜை, நேற்று மோகனூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் அருணகிரி, வரதராஜ் சதாசிவம், பொன்னுசாமி ஆகியோர் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விபரம்: நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள ராஜாகொமராபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால் ஆகியவை ₹184 கோடியில் புனரமைப்பு பணி, கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. இதன் காரணமாக வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் வாய்க்கால் புனரமைப்பு பணி முடிவடைந்து, நவம்பர் மாதம் ஜேடர்பாளையம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மற்ற வாய்க்கால்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இன்றுவரை மோகனூர் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

மோகனூர் வாய்க்கால் புனரமைத்த ஒப்பந்தகாரர்கள், வாய்க்காலின் இடதுபுறத்தில் அளவுக்கதிகமாக கரையை இடித்து, இடதுபுறம் சுவர் அமைத்தனர். ஆனால், பணிகள் முடிந்தபின், வாய்க்காலின் நடுவில் மண்ணை குவித்துவிட்டு சென்றுவிட்டனர். வாய்க்காலின் கரைக்கு தேவையான மண்ணால் கரைகளையும், தடங்களையும் வலுப்படுத்திய பிறகு, மீதியுள்ள மண்ணை விவசாயிகளுக்கு வழங்கலாம் என கூறினோம். ஆனால் கனிமவளத் துறை மூலம் மண் அள்ள டெண்டர் விட்டனர். டெண்டர் எடுத்தவர்கள் தங்கள் வியாபாரத்திற்கு ஏற்ப மண்ணை அள்ளி வருகிறார்கள்.  டெண்டர் விட்டு 2 மாதமாகியும் மண்ணை வாய்க்காலில் இருந்து அப்புறப்படுத்தாமல் இருப்பதால், இதுவரை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. வாய்க்காலில் வேலைசெய்ய, தண்ணீர் நிறுத்தப்பட்டு 11 மாதம் முடிந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது வாய்க்காலின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளதால், நிறைய இடங்களில் கரை மண் சரிந்து வாய்க்காலில் விழுகிறது. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியும், அவர்கள் நேரில் வந்துகூட பார்க்கவில்லை. எனவே, மோகனூர் வாய்க்காலை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இந்த ஆண்டு முழுவதும் வாய்க்காலில் தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: