பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? பெற்றோருடன் 2வது நாளாக கருத்து கேட்பு

நாகர்கோவில், ஜன.8: கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக நேற்று இரண்டாம் நாளாக கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்ட பின்னர் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்தி தேர்வுகளை நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பெற்றோரிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கருத்துகளை எழுத்துமூலம் பெறும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் 487 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியரின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகன் தலைமையில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் வேலவன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் வந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அவர்களை அமர வைத்து அவர்களிடம் படிவங்களை அளித்து எழுத்துபூர்வமாக கருத்துக்களை ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர். முன்னதாக அவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த சானிட்டைசர் போன்றவையும் வழங்கப்பட்டது. இந்த கருத்துகள் தொகுப்பு தமிழக அரசின் கல்வித்துறைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் பிறகு இது தொடர்பான முடிவு அதிகாரபூர்வமாக அரசால் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>