×

எஸ்சி, எஸ்டி மாணவர்களை போல் எம்பிசி, ஓபிசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம்

புதுச்சேரி, ஜன. 7: எஸ்சி, எஸ்டி மாணவர்களை போல் எம்பிசி, ஓபிசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் ஏனாம் பிராந்தியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு குரியம்பேட் பகுதியில் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். தரியல்திப்பா பகுதியில் புதிய பள்ளி கட்டிடம், புறக்காவல் நிலையம், மத்திய சமையல் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர், ஏனாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அம்பேத்கர் அறிவுசார் மையத்தை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்து பேசுகையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஒவ்வொரு ஆண்டும் ஏனாமுக்கு எதையாவது செய்தே ஆக வேண்டும் என நினைப்பவர். எம்எல்ஏவாக ஏனாம் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்துள்ளார். அம்பேத்கர் அறிவுசார் மையம் போன்று புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபமும் இதேபோல் வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் மல்லாடி ஒரு சண்டைக்காரர். ஏனாம் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் சண்டை போடுவதில் முன்னணில் இருப்பார். ஒரு உதாரணம் வெள்ள தடுப்புச்சுவர் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அதனை செயல்படுத்த போராடினோம். தற்போது அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. எல்கேஜி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஏழை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை முழுவதையும் ஏற்கும் திட்டத்தை இந்தியாவிலேயே புதுச்சேரி அரசுதான் முதன்முறையாக கொண்டு வந்தது.

இந்த பெருமை புதுச்சேரி அமைச்சரவைக்குதான் உண்டு. அனைத்து ஏழை மாணவர்களுக்கும் இலவசமாக கல்வி கொடுப்பதே அரசின் நோக்கம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கா கல்வி நிதி முழுவதையும் ஏற்கும் திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். எங்கள் அரசு அனைவருக்குமானது, என்றார்.  இதில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, ஷாஜகான், அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், லட்சுமிநாராயணன், ஜான்குமார், கீதா ஆனந்தன், வைத்திலிங்கம், விஜயவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : SC and ST ,government ,OBC ,MBC ,
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...