10, 12ம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்கலாமா?: குமரியில் 487 பள்ளிகளை திறக்க பெற்றோரிடம் கருத்துகேட்பு

நாகர்கோவில், ஜன.7: தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக குமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளில் கருத்துகேட்பு கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அதே வேளையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் காரணமாக பெற்றோரிடம் கருத்து கேட்ட பின்னர் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்தி தேர்வுகளை வைக்க கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்காக பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 487 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை திறந்து செயல்படுத்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு நேற்று முதல் கருத்துகேட்பு தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று காலையில் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கருத்து கேட்பு கூட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு 11 மணிக்கு இது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு பெற அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த கருத்துகள் வரும் 8ம் தேதிக்கு அரசுக்கு அறிக்கையாக வழங்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: