×

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது

சென்னை, நவ. 22: சென்னை விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக துபாய்க்கு போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அந்த பயணி சரிவர பதில் கூறாமல், மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து சுங்க அதிகாரிகள், அவருடைய உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர்.

எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை சுங்கத்துறை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலில் தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த தங்க கட்டிகளின் எடை 1.6 கிலோ. 24 கேரட் சுத்தமான தங்கம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.80 கோடி என தெரிந்தது. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்ததோடு தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த வடமாநில இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : DUBAI ,CHENNAI ,NORTH STATE YOUTH ,Chennai airport ,Customs Air Intelligence ,Northern ,State ,
× RELATED விருகம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடி கைது