தாசில்தாரிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்கு!

வந்தவாசி: வந்தவாசியில் தாசில்தாரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததாக வந்த புகாரின்பேரில் 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி டவுன், ஆரணி சாலையை சேர்ந்தவர் சர்தார் சரீப்(60). இவருக்கு சொந்தமான பூர்வீக வீட்டுமனைகள் பயணியர் விடுதி எதிரே உள்ளன. இவரது உறவினர் இவருக்கு தெரியாமலேயே அந்த பகுதியை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த தீபக்குமார் என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

தீபக்குமார் தாலுகா அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்தி வீட்டுமனையை அளவீடு செய்யும் பணியை கடந்த 4ம் தேதி செய்தாராம். அப்போது அங்கு சென்ற சர்தார் சரீப் மற்றும் அவரது உறவினர்கள் பசுருதீன்(45), இவரது மனைவி பர்வீன்பேகம்(42), ரஹமத்துல்லா(45) ஆகியோர் நிலம் அளவீடு செய்வதை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் திருநாவுக்கரசரிடம் கேட்டுள்ளனர். அந்த இடம் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே நிலம் அளவீடு செய்யக்கூடாது எனக்கூறினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாசில்தார் திருநாவுக்கரசு, வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 2 பெண்கள் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>