சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்வு

திருவண்ணாமலை, ஜன.7: திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, வெம்பாக்கத்தில் 19.40 மிமீ மழை பதிவானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 12ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, வெப்பச் சலனம் காரணமாக தொடர்ந்து சில நாட்கள் கனமழை நீடிக்கும் என எச்சரித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக, வெம்பாக்கத்தில் 19.40 மிமீ மழை பதிவானது.

அதேபோல், திருவண்ணாமலை- 2 மிமீ, ஆரணி- 7.20 மிமீ, செய்யாறு- 10 மிமீ, ஜமுனாமரத்தூர்- 6 மிமீ, வந்தவாசி- 9.40, போளூர்- 4.20 மிமீ, தண்டராம்பட்டு- 3.20 மிமீ, கீழ்பென்னாத்தூர்- 5.20 மிமீ, சேத்துப்பட்டு- 3.80 மிமீ மழை பதிவானது. தொடர்ந்து பெய்யும் மழையால், ஏரிகள், குளங்கள், பாசன கிணறுகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 266 கன அடி தணணீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 101.20 அடி நிரம்பியிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவான 7321 மில்லியன் கனஅடியில், தற்போது 3934 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.

அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 46.42 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 8.85 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 58.02 அடியாகவும் உயர்ந்திருக்கிறது. செண்பகத்தோப்பு அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதன்படி, தற்போது வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: