×

தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவால் கொந்தளிப்பு; ‘எஸ்ஐஆர்’ வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்: மேற்குவங்கத்தில் பட்டியல் தயாரிப்பு பணி ஸ்தம்பித்தது

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு, மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்புப் பணி (எஸ்ஐஆர்) தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்த பிறகு, டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குறுகிய காலக்கெடுவுக்குள் ஒரு அலுவலர் சுமார் 200 படிவங்களின் தரவுகளைப் பதிவேற்ற வேண்டியிருப்பதால், இது தங்களுக்கு நியாயமற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதாகக் கூறி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்துள்ளனர். சிலிகுரி, ஹவுரா, பரக்பூர், பராசத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகளில் இருந்து அலுவலர்கள் வெளிநடப்பு செய்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாக இருப்பதால், தங்களது அன்றாடப் பள்ளிப் பணிகளுடன், தேர்தல் ஆணையத்தின் இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க முடியவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திடீரென டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யச் சொல்வதாகவும், அதற்குரிய முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும், போதுமான தரவு உள்ளீட்டாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, வயது முதிர்ந்த பல அலுவலர்கள், இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் செயலிகளைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், நள்ளிரவில் செல்போனில் அழைத்து திடீர் உத்தரவுகள் பிறப்பிப்பது மூலம் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். எனவே, பணிச்சுமையைக் குறைக்க உள்ளூர் அளவில் தரவு உள்ளீட்டாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், படிவங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடுபிடித்துள்ளது. தேவையான தரவு உள்ளீட்டாளர்களை மாநில அரசு நியமிக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்ட, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ, ‘மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணியை முடிப்பது சாத்தியமற்றது’ எனக் கூறி தேர்தல் ஆணையத்தின் காலக்கெடுவைக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே, அலுவலர்களின் பணிச்சுமை குறித்து தேர்தல் ஆணையத்திற்குத் தெரியப்படுத்தி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான டிசம்பர் 4ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க தேர்தல் ஆணையம் இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Electoral Commission ,SIR ,Kolkata ,West Bengal ,Election Commission ,Union Territories ,Tamil Nadu ,West ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில்...