×

778 பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி

அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டத்தில் 778 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் சிவசங்கர் நேற்று வழங்கினார். சிரமமின்றி படிப்பேன் என மாணவி பெருமிதமாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை கிடைக்கச் செய்து அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொருளாதார சூழ்நிலையால் அவர்களது கல்வி எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-26 ம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 3,306 மாணவர்கள், 3,582 மாணவிகள் என மொத்தம் 6,888 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் வண்ணம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி, நிர்மலா (பெ) மேல்நிலைப்பள்ளி மற்றும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 778 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா கூறுகையில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் தினமும் பள்ளிக்கு நடந்து வருகிறேன். இந்நிலையில் எனக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனாக தினமும் பள்ளிக்கு சரியான நேரத்தில் சென்று வருவதுடன், மாலை பள்ளி முடிந்தவுடன் தாமதமின்றி விரைவாக வீட்டிற்கு செல்ல முடியும். நான் சிறந்த முறையில் கல்வி கற்க, சிரமமின்றி பள்ளிக்கு சென்று வரும் வகையில் விலையில்லா மிதிவண்டியை வழங்கிய முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராம் கூறுகையில், தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வருகிறேன். சில நேரங்களில் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் எனக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் நான் பள்ளிக்கு மிதிவண்டியில் எளிதாக சென்று வருவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதமின்றி பள்ளிக்கு செல்வதுடன், வீட்டிற்கும் சரியான நேரத்திற்கு வர முடிகிறது. ஏழை, எளிய மாணவர்களும் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் வகையில் விலையில்லா மிதிவண்டியை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.

கூட்டத்தில், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் (பொ) சுமதி, மாவட்டக்கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu government ,Ariyalur ,Minister ,Sivashankar ,Chief Minister ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்