×

பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு ‘ஹைபிரிட்’ மாடலில் காற்றாலை அமைக்க டெண்டர்: 18.75 மெகாவாட் திறனில் காற்றாலை, 16 மெகாவாட் திறனில் சூரிய சக்தி, பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்தில் உள்ள நிலையில் ஒன்றிய மற்றும் மாநில தொகுப்பை சேர்த்து மாநிலத்தின் மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 10,591 மெகாவாட்டாகவும், மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுத்திறன் சுமார் 11,739.91 மெகாவாட் என தமிழக அரசு 2024-25ம் ஆண்டிற்கான தரவுகளில் குறிப்பிட்டுள்ளது. இதில் மின் வாரியத்திற்கு சொந்தமான காற்றாலைகளும், தனியார் காற்றாலைகளும் அடங்கும்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு பழைய காற்றாலைகளை புதுப்பித்து அவற்றின் திறனை அதிகரிப்பதற்கான காற்றாலை திட்ட திருத்தப்பட்ட வரைவு அறிக்கை – 2023 ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டன. இதில், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் காற்றாலைகள் பழமையாக இருந்தால் அவற்றை தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம், அவற்றின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, காற்றாலைகளின் இறக்கைகளின் உயரம் 120 முதல் 140 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

மேலும், அதன் வடிவமைப்பு, திறன் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். இதற்கு தேவையான வசதிகளை மின்வாரியம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு, ‘ஹைபிரிட்’ முறையில், பொது – தனியார் பங்கேற்பு வாயிலாக, காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையங்களையும் சேர்த்து அமைக்க மின் வாரியம் முடிவு கடந்த மார்ச் மாதம் முடிவு செய்தது. இதுதொடர்பாக, ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில், பழைய காற்றாலை அமைந்துள்ள இடங்களில் தற்போது, 18.75 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 16 மெகாவாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையங்களை Build, Own, and Operate (பி.பி.பி.) எனப்படும் பொது – தனியார் கூட்டு பங்கேற்பின் வாயிலாக அமைக்க மின்வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றன. இந்நிலையில் பழைய காற்றாலையை அகற்றி விட்டு, புதிய காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த பழைய சிறிய காற்றாலை இயந்திரங்களை புதுப்பித்து, மறுசீரமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு முன், டெடா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்துடன் இணைந்து கடந்த 1986 – 1993 தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள கயத்தாறு I மற்றும் II, புலியங்குளம், முப்பந்தல், கேத்தனூர் பகுதிகளில் 110 சிறிய காற்றாலைகள் (மொத்த திறன் 17.355 மெகாவாட்) நிறுவப்பட்டது.

தற்போது 15 இயந்திரங்கள் மட்டுமே செயல்படுகின்றன; மீதமுள்ள 95 இயந்திரங்கள் உதிரிபாகங்களின் பற்றாக்குறை காரணமாக இயங்காமல் உள்ளன. எனவே, அவற்றை இப்போது புதிய ஹைபிரிட் முறைப்படி மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ஹைபிரிட் திட்டத்திற்கு 6 இடம் பரிசீலனை
புதிய ஹைபிரிட் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான 6 இடங்களை தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்திற்கு தேர்வு செய்து பசுமை எரிசக்தி கழகம் அனுப்பி இருந்தது. அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு மறுசீரமைப்பு சாத்தியக்கூறு, மின் இணைப்பு சாத்தியம் மற்றும் நிதி சுமை உள்ளிட்டவைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதியாக கயத்தாறு I மற்றும் II, புலியங்குளம், முப்பந்தல் ஆகிய இடங்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

* 25வருடங்கள் பராமரிக்க வேண்டும்
காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, தனியார் நிறுவனத்திற்கு, மின் வாரியம் குத்தகைக்கு வழங்கும். அந்த இடத்தில், நிறுவனம் தன் சொந்த செலவில் மின் நிலையம் அமைத்து, 25 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். அந்நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

* திட்டத்தின் சிறப்பம்சம்
* புதிய காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையத்தையும் சேர்த்து அமைக்க திட்டம்
* பகலில் சூரியசக்தி மின்சாரமும், சீசன் காலத்தில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும்
* ஏற்கனவே மின் வழித்தடம் இருப்பதால், புதிய வழித்தடம் அமைக்க தேவையில்லை

Tags : Green Energy Corporation ,Tamil Nadu ,Union ,Tamil Nadu government… ,
× RELATED தமிழகத்தில் தொடர் கனமழையால் வேகமாக...